கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரு கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நோக்கி வந்துள்ளது. அது சாலையில் சென்ற வாகனங்களை இடித்து தள்ளி நிற்காமல் சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த கண்டெய்னர் லாரியை துரத்தி பிடிக்க முற்பட்டுள்ளனர்.
காவல் துறையினர் துரத்துவதைத் தெரிந்துகொண்ட கண்டெய்னரில் இருந்தவர்கள், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் கண்டெய்னரில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டு அவர்களை பிடித்துள்ளனர்.
கண்டெய்னரில் மொத்தமாக 7 பேர் பயணித்துள்ளனர். இதில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் ஒருவர் தப்பியோடி உள்ளார். மற்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் இந்த கண்டெய்னரை சோதனை செய்ததில் அதில் ரொக்கமாக 60 லட்ச ரூபாய் பணமும் ஒரு சொகுசு கார் ஒன்றும் இருந்துள்ளது. இந்த காரை வைத்து இவர்கள் கேரள மாநிலம் திருச்சூரைச் சுற்றிய புறநகர் பகுதிகளில் அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து 4.30 மணிக்குள் அங்கிருக்கும் ஏடிஎம்மில் கொள்ளை நடத்தியுள்ளனர். அதன் பிறகு கொள்ளையடித்த பணத்துடன், கண்டெய்னர் மூலம் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
இதேபோன்று பெங்களூரு மற்றும் ஓசூரில் சில இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், இவர்கள்தான் அந்த கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து முன்னாள் டிஜிபி ரவி பேசும்போது, “இவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள். இவர்களின் பொழுதுபோக்கே, கொள்ளையடிப்பதுதான். கேரளாவைப்போன்று பல மாநிலங்களிலும் இவர்கள் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம். மேலும் இந்த வழக்கானது கேரளாவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், குற்றவாளிகளை நாங்கள் அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம்.” என்றார்.