சேலத்தில் பறவைகளை சுடுவதை தடுத்த முதியவரை மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு தாராபுரம் ஊராட்சியில் சொந்தமாக பண்ணை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (75) என்ற முதியவர் தனது மனைவியுடன் தங்கி தோட்ட வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த வாலிபர் ஒருவர், பறவைகளை வேட்டையாட வேண்டும் எனவும், பண்ணையின் கதவை திறந்துவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், விவசாயி கோவிந்தராஜ் இங்கு பறவைகளை வேட்டையாட கூடாது என்று கூறி கதவை திறக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த வாலிபர், வேறு வழியாக தோட்டத்திற்குள் வந்து பறவைகளை சுடுவதற்காக குறி பார்த்துள்ளார். அப்போது கோவிந்தராஜ் பறவைகளை வேட்டையாட கூடாது என்று கூறி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கோவிந்தராஜை துப்பாக்கியால் சுட்டுள்ளார். வலது மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து, முதியவர் கீழே விழ, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கு சென்று முதியவரின் மனைவி, மார்பில் குண்டு காயத்துடன் கிடந்த கணவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் துப்பாக்கியால் சுட்ட வாலிபர் தும்பிபாடி ஊராட்சியில் உள்ள குதிரைக்குத்திபள்ளம் பகுதியை சேர்ந்த அன்பு (35) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள வாலிபர் அன்புவை தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். டேனிஸ்பேட்டை வனச்சரக பகுதிகளில் இவர் பறவைகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடியதாகவும் கூறப்படுகிறது. இதனால், வனத்துறை அதிகாரிகளும் இவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.