ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். Mindful AI Lab என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார். 2021ஆம் ஆண்டு சிறந்த புத்திசாலித்தனமான பெண்களில் ஒருவர் என்ற விருதும் பெற்றவர்.
இந்நிலையில், கடந்தவாரம் கோவா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கண்டோலிமில் இருக்கும் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் சுசனா சேத் தனது 4 வயது மகனுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், வேலை நிமித்தமாக தான் பெங்களூரு செல்லவேண்டும் என்றும் அதற்காக ஒரு வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து தரும்படி அப்பார்ட்மெண்ட் ஊழியர்களிடம் சுசனா சேத் கேட்டுள்ளார்.
சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள், கால் டாக்ஸியை விட, விமானத்தில் சென்றால் வசதியாக இருக்குமே? என்று கூறியிருக்கின்றனர். ஆனால், தனக்கு கார்தான் வேண்டும் என்று சுசனா சேத் பிடிவாதமாக கூறவே, ஊழியர்கள் அவருக்கு வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து தந்துள்ளனர்.
ஊழியர்கள் ஏற்பாடு செய்து தந்த வாடகை காரில் சுசனா சேத் பெங்களூரு புறப்பட்டுச் சென்றதும், ஊழியர்கள் அவர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்பொழுது ஒரு டவல் முழுவதிலும் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சியான ஊழியர்களுக்கு அப்போது தான் ஒன்று நினைவுக்கு வந்துள்ளது. அப்பார்ட்மெண்டில் அறை எடுக்க வந்த சுசனா சேத் தன்னுடன் 4 வயது குழந்தையும் உடன் அழைத்து வந்துள்ளார். ஆனால், அவர் அறையை காலி செய்து பெங்களூர் சென்ற சமயம் குழந்தை உடன் செல்லாதது நினைவுக்கு வந்தது. சுசனாசேத் மீது சந்தேகம் கொண்ட ஊழியர்கள் தாமதிக்காமல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த போலிசார் ஊழியர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், சுசனா சேத்திடம் போனில் விசாரித்துள்ளனர். மாதவிடாய் காரணமாக ரத்தக்கறை ஏற்பட்டுவிட்டது என கூறிய அவரிடம் மகன் எங்கே என்று போலீசார் கேள்வி எழுப்பினர். அதற்கு தன்னுடைய நண்பர் வீட்டில் இருப்பதாக கூறி முகவரி ஒன்றினையும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சுசனா சேத் அளித்த அந்த முகவரியை சரிபார்த்த போது அது போலியான முகவரி என்று தெரியவந்தது. காவல்துறையினர் உடனடியாக சுசனா சேத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரை நேரில் அழைத்து விசாரித்த போது அதிர்ச்சி அளிக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவரை விசாரித்த காவல்துறையினர் அவரது பைகளை சோதனை செய்தபோது, அதில் இறந்த 4 வயது குழந்தையின் உடல் இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சுசனா சேத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, இச்சம்பவம் குறித்து ஜகார்த்தாவில் இருக்கும் சேத்தின் கணவர் வெங்கட் ராமனுக்கு போலிசார் தகவல் தெரிவித்து, கொலைக்காண காரணத்தை விசாரித்து வருகின்றனர். சுசனா சேத் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுசனா சேத் டேட்டா சயின்ஸ், AI டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்து வருகிறார். தன் மகனை கொலை செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரிதும் பேசுபொருளாகியுள்ளது.