உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் 23 வயதான இளைஞன் ஒருவரை திருட வந்தவன் என நினைத்து வீட்டின் உரிமையாளரும் அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காசியாபாத் நகரத்தின் கோடா பகுதியில் கடந்த வியாழன் அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வீட்டில் திருடவந்ததாக கூறி அந்த இளைஞரை அடித்து உதைத்த அப்பகுதி மக்கள் பின்னர் காவல்துறையினரிடம் அந்த இளைஞரை ஒப்படைக்க நினைத்து தகவல் தெரிவித்திருக்கிறார்கள். போலிசார் வந்த பார்த்தபோது அந்த இளைஞர் சுயநினைவின்றி இருந்திருக்கிறார். உடனடியாக அவரை மீட்ட காவலர்கள் தங்களது வாகனத்திலேயே அருகில் இருந்த MMG மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அந்த இளைஞரைபரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலிசாரின் முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
இறந்த இளைஞர் முஸ்தபாபாத்ஹில் வசிக்கும் பர்வேஸ் சைஃபி. அவர் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். வீட்டின் உரிமையாளரின் 15 வயதான பெண்ணும் ,சைஃபியும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை தொலைபேசியில் பேசியுள்ளனர், அதன்பிறகு சைஃபி அவளது பெற்றோர் இல்லாத நேரத்தில் காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த தருணத்தில் எதார்த்தமாக பெண்ணின் தந்தை வீடு திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில், தனது மகளுடன் சைஃபி இருப்பதை பார்த்த அவர் அவனை திருடன் என்று கூறி அக்கம்பக்கம் வீட்டாருடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளார்.
இளைஞர் சைஃபிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.