மதுரை மாநகரில் பூட்டிய வீடுகளை நோட்டுமிட்டு தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த வழக்கறிஞரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை ஊத்தங்குடி மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டப்பட்ட வீடுகளை பகலில் நோட்டமிட்டு இரவில் அந்த வீடுகளின் பூட்டை உடைத்து, வீட்டில் உள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற வீடுகளில் கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், மதுரை மாநகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மதுரையை சேர்ந்த முருகன், கார்த்திக் கண்ணன், வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் மாரிமூக்கன் ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் நான்கு பேரிடமிருந்து சுமார் 3லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், சுமார் 1லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் 18,700 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது ஏற்கெனவே மூன்று வழக்குகள் இருப்பதும் தெரியவந்த நிலையில், நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வெகுவாக பாராட்டினார். இதில் திருட்டு குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் ஒருவர்கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.