சென்னையில் கிணற்றில் குளிக்கச் சென்றபோது குடிபோதையில் நண்பனை எட்டி உதைத்ததில் நீரில் மூழ்கி அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டி உதைத்த சக நண்பன் சிசிடிவியால் சிக்கினார்.
சென்னை குரோம்பேட்டையை அடுத்துள்ள அஸ்தினாபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் புருசோத்தமன் (37). இவர், கடந்த 5ஆம் தேதி மாலை தனது நண்பர்களோடு சேர்ந்து அதே தெருவில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அனைவரும் குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீச்சல் அடித்த களைப்பில் சிலர் கிணற்றின் மேல் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், கிணற்றின் மேல் அமர்ந்திருந்த புருஷோத்தமனை, பின்னால் வந்த கார்த்திக் என்பவர் எட்டி உதைத்து கிணற்றில் தள்ளினார். இதில் புருசோத்தமன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீரில் மூழ்கியவர் மேலே வராததால் அவரை தேடிப்பார்த்து மீட்ட நண்பர்கள் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அவரது மனைவி அனுசுயா தனது கணவருக்கு நன்றாக நீச்சல் தெரிந்த நிலையில் நீரில் மூழ்கி எப்படி உயிரிழப்பார் என போலீசாரிடம் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பினார். இதனால் சிட்லபாக்கம் போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்று விசாரணை செய்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது அதில் புருசோத்தமன் முதுகில் காலால் எட்டி உதைத்த கார்த்திக் கிணற்றில் தள்ளியது தெரியவந்தது.
அதனடிப்படையில் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், குடிபோதையில் விளையாட்டாக எட்டி உதைத்தேன் அவர் இறப்பார் என்று நினைக்கவில்லை என்று கண்ணீர்மல்க போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து 174 பிரிவின் கீழ் போடப்பட்ட வழக்கை 304 பிரிவாக மாற்றி கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.