வாணியம்பாடி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்யக் கூறி வற்புறுத்தியதற்காக, இளைஞரொருவர் அக்காதலியின் நண்பர்களால் தாக்கப்பட்டுள்ளார். குடியிருப்பு பகுதிக்குள் நண்பர்கள்சூழ கத்தியுடன் கும்பலாக சென்ற அப்பெண்ணின் நண்பர்கள், அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நண்பர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த சக்திவேல், ஏலகிரி மலைப்பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யாவை சக்திவேல் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் சாந்தகுமார், பூவரசன், ஹரி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட கும்பல் ஏலகிரி மலையிலிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருமாஞ்சோலை பகுதியில் உள்ள சக்திவேல் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, சக்திவேலை அழைத்து `ஐஸ்வர்யாவை திருமணத்திற்காக வற்புறுத்த வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளனர்.
இதில் சக்திவேல் மற்றும் ஐஸ்வர்யாவின் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல் கையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்ட அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஐஸ்வர்யாவின் 5 நண்பர்களையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் 2 பேர் தப்பி ஓடி உள்ளனர். மற்ற 3 பேரையும் அவர்கள் கொண்டு வந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் வாணியம்பாடி நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் தாக்கியதில் பூவரசன், ஹரி மற்றும் சாந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்ததால் அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக காவல்துறையினர் சேர்த்துள்ளனர். இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்