சென்னை அருகே நண்பரை கொலை செய்த கூட்டாளிகள், அதற்கான அரிவாளை சபரிமலையிலிருந்து வரும்போது வாங்கி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (28). இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது கூட்டாளிகளான அப்பு என்ற தாமோதரன் (23), ஜெகநாதன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரும் பெயிண்டர் வேலை செய்து வருகின்றனர். உள்ளூரில் பெயிண்டர் வேலைகளை பிடிப்பது, மற்ற பணிகளுக்கு ஆட்களை அனுப்பி வைப்பது என்பதில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதில் யுவராஜ் மற்ற மூன்று பேரையும் மிரட்டி, ‘தனக்கு கீழ் தான் வேலை செய்ய வேண்டும், இல்லை என்றால் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு அவர் மிரட்டியதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஜெகநாதன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்ததால், பிரச்னை செய்யாமல் விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சபரிமலைக்கு சென்ற ஜெகநாதன் மாலையை கழட்டிய பின்னர், அங்கேயே யுவராஜை கொல்வதற்கு அரிவாள் வாங்கியிருக்கிறார். அதை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிய அவர், வந்தவுடன் தனது கூட்டாளிகளான அப்பு மற்றும் முத்துக்குமாரிடம் பேசி திட்டமிட்டுள்ளார். மூன்று பேரும் ஒன்றாக சென்னையை அடுத்த கோவூர் அருகே அமர்ந்து குடித்துள்ளனர். அப்போது அப்பு என்பவரின் போனில் இருந்து யுவராஜ்க்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அங்கே யுவராஜை குடிக்க வைத்து, போதை ஏறிய பின்னர் அவரை தான் வாங்கி வந்த அரிவாளால் ஜெகநாதன் சரமாரியாக வெட்டியுள்ளார். அவரைத்தொடர்ந்து அப்பு மற்றும் முத்துக்குமாரும் அதே அரிவாளை வாங்கி யுவராஜை வெட்டியிருக்கின்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலை செய்த மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளனர். போகிப் பண்டிகை அன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், யுவராஜ் தொலைபேசிக்கு கடைசியாக வந்த அழைப்பை வைத்து அப்புவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜெகநாதன் மற்றும் முத்துக்குமாரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் மேற்கண்ட தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு போலீஸார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.