பங்குச்சந்தை விவரங்களை முன் கூட்டியே முகவர்களுக்கு தெரிவித்ததாக தேசிய பங்குச்சந்தை முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை நேற்று டெல்லியில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில், இன்று அவருக்கு 7 நாட்கள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.
தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்டு விசாரணையில் என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்திருந்தனர். அதைத்தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு சிபிஐ காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.
தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை கண்டுபிடித்திருந்த செபி, அவருக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக விதி்த்திருந்தது.
இதற்கிடையே என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பே, என்எஸ்இ சர்வர்களை கட்டுபாட்டில் வைத்து இருக்கும் இவர்கள் சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஆதாயத்தை சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் பார்த்திருக்கலாம் என்று குற்றம்சாட்டப்பட்டும் இருந்தது. இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் சில நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.