பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித்தருவதாக பொதுமக்களிடம் ரூ. 57 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த முன்னாள் அதிமுக பிரமுகர் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாநகர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் அதிமுக பிரமுகர் சுகுமார் (48). இவர் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், இடையாளர், தூய்மை பணியாளர், வாகன ஓட்டுனர் உள்ளிட்ட அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாகவும், ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணிடம் ரேஷன் கடையில் விற்பனையாளர் பணி வாங்கித் தருவதாக 2 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மேலும் அவர் கூறியதன் பேரில் சிலர் சுகுமாரிடம் பணம் கொடுத்துள்ளனர். மொத்தம் 12 பேரிடம் ரூ.57 லட்சத்து 45 ஆயிரம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட SP ராஜேஷ் கண்ணனிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதை அடுத்து சுகுமார் தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் தனிப்படை காவலர்கள் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரில் பதுங்கி இருந்த சுகுமாரை, குற்றப்பிரிவு DSP பூபதிராஜன் தலைமையிலான காவலர்கள் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.