கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் குமரநெல்லூர் பகுதியில் வசித்து வருபவர் குஞ்சான். இவருக்கு 3 வயதில் ஒரு பேரக் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு ஒரு சவரன் தங்கச் சங்கிலி அணிவித்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி காலையில் குழந்தையைக் குளிக்க வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்குச் குஞ்சான் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்துள்ளது. குஞ்சான் அப்பகுதி முழுவதும் தேடியும் நகை கிடைக்கவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, குஞ்சான் வீட்டின் வெளிப்பக்கத்தில் உள்ள சமையல் அறையில் பேப்பர் ஒன்றில் எழுதி வைத்த கடிதமும், ஒரு கட்டுப் பணமும் இருந்துள்ளது. பணத்தை எண்ணிப் பார்த்த போது அதில் 52,500 ரூபாய் இருந்துள்ளது.
அந்தக் கடிதத்தில், "நான் உங்களுடைய தங்கச் சங்கிலியைத் திருடி விற்றுவிட்டேன். நீங்கள் தேடுவதைப் பார்த்து மனம் அமைதி இல்லாமல் தவித்தது. தங்கச் சங்கிலியை விற்றதன் மூலம் கிடைத்த முழு தொகையும் இதில் உள்ளது. என்னை மனதார மன்னித்துவிடுங்கள்" என எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.