நெல்லை மாவட்டம் களக்காட்டில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி நீராவி முருகன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்த நீராவி முருகன் மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டில் நீராவி முருகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது தப்பி ஒட முயன்ற நீராவி முருகன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நீராவி முருகன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பவானி போலீசார் நீராவி முருகனை பிடிக்க முயன்றபோது அவர் காவல் ஆய்வாளரை வெட்டிக் கொல்ல முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இவ்வாறு பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகனை இன்று திண்டுக்கல் தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.