‘வீட்டை இடி, தாலியை உருக்கி தங்கத்தை கொடு’- பரிகார பூஜை செய்வதாக மோசடி செய்த சாமியார் கைது

‘வீட்டை இடி, தாலியை உருக்கி தங்கத்தை கொடு’- பரிகார பூஜை செய்வதாக மோசடி செய்த சாமியார் கைது
‘வீட்டை இடி, தாலியை உருக்கி தங்கத்தை கொடு’- பரிகார பூஜை செய்வதாக மோசடி செய்த சாமியார் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குறி சொல்லவதாக கூறி வீட்டை இடிக்க வைத்து பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணத்தை பறித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சக்தி (37). இவர், விளாத்திக்குளம் - நாகலாபுரம் சாலையில் 'சக்தி வாராகி' என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்துள்ளார். இவரிடம் குறி கேட்டு தன்னுடைய குடும்பப் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று விளாத்திக்குளம் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தங்கபேச்சியம்மாள் (52), கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிட நிலையம் சென்று குறி கேட்டுள்ளார்.

அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், இறந்துபோன உன் கணவரின் ஆன்மா சாந்தியடையவில்லை, உனது வீட்டை இடித்து மாற்றியமைத்தால்தான் உன் கணவரின் ஆன்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்னை தீரும் என்று கூறியுள்ளார். அதற்கு, பணம் இல்லை என்று கூறிய அந்த பெண்ணிடமிருந்து 2½ பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30ஆயிரம் பணத்தை கொடுத்து வீட்டை இடிக்கச்சொல்லி உள்ளார்.

அந்த பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்னைகள் தீராததால் அப்பெண் மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், ரூபாய் 3500 பணத்தையும் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, பூஜையில் வைத்து தருகிறேன் உனது பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண்ணும் 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்து கொடுக்கவில்லை, அதை கேட்ட அந்த பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலி சாமியாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com