x வலைதளப்பக்கத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கர்நாடகத்தில் இலவச பேருந்தில் ஏறுவதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் கைகளை காட்டி பேருந்தை நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால் இஸ்லாமியர்கள் இணைந்து அப்பேருந்தை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
அது பற்றி அவர் தனது x வலைதளப்பக்கத்தில் குறிப்பிடுகையில் “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் பஸ்ஸில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இஸ்லாமிய பெண் பேருந்தை நிறுத்த கைகாட்டியும் பேருந்து நிற்காமல் சென்றதன் விளைவைப் பாரீர். இதுக்கெல்லாம் யோகிஜி மாடல் தான் சரிப்பட்டு வரும்..” என்று பதிவிடுள்ளார்.
இவர் பதிவிட்டுள்ள இப்பதிவு முற்றிலும் போலியானது என்று புதிய தலைமுறை உண்மை சரிபார்ப்பு மூலம் கண்டறிந்துள்ளது.
இவ்வீடியோவில் காட்டப்பட்டுள்ள பேருந்தின் நம்பர் பிளேட்டில் "ஜிஜே" என்ற முதலெழுத்தும் இருக்கிறது. இந்த பேருந்தானது குஜராத்தை சேர்ந்தது என்றும், இந்த வீடியோ குஜராத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அதே சமயம் அதே நிறத்தில் காணப்படும் இந்த பேருந்தும், கலவர காட்சிகளும் tv9 என்ற குஜராத்தின் அஃபீஷியல் யூட்டூப் சேனலில் இவ்வீடியோவானது வெளியாகி இருக்கிறது என்றும் தெரியவந்தத்து. அதை தீர சரிபார்த்ததில் இந்த வன்முறை சம்பவம் குஜராத்தின் சூரத் பகுதியில் நடந்த படுகொலையை சம்பவங்களை எதிர்த்த அமைதி பேரணியானது வன்முறை சம்பவமாக மாறிய காட்களுடன் ஒத்து செல்கிறது.
இதன் பின்புலம் என்னவென்றால், ஜூலை 5, 2019 அன்று, குஜராத்தின் சூரத் பகுதியில் ஏற்பட்ட படுகொலைகள் சம்பவங்களை எதிர்த்து நடந்த அமைதி பேரணியானது கலவரமாக மாறி இருக்கிறது. போதுமான அனுமதி இல்லாமல் இப்பேரணி நடத்தப்பட்டதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் அது வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் குறித்து அகமதாபாத்தின் மிரர் கட்டுரையின் படி "போராட்டம் வன்முறையாக மாறிய போது போராட்டக்காரர்களால் எறியப்பட்ட கல் வீச்சின் காரணமாக இரண்டு பிஆர்டிஎஸ் பேருந்துகளும் மற்றும் போலீஸாரின் 2 வாகனங்களும் சேதமடைந்தன. இவ்வன்முறையை கட்டுப்படுத்த 2 முறை துப்பாக்கி சூட்டினையும், கிட்டத்தட்ட ஒரு டஜன் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கின்றது.
குஜராத்தில் நடந்த இச்சம்பவத்தை கர்நாடகாவில் நடந்தது என்று கூறியது மட்டுமல்லாது அதற்கு காரணம் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தான் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மீது வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி நட ந்த சம்பவத்தை தற்போது நடந்ததாக காட்டியுள்ளனர்.
இது முதல் தடவை இல்லை இதற்கு முன்னதாக இதே வீடியோவானது மும்பையின் பாந்த்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது முஸ்லீம் ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் குழு கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாக தவறான செய்தியானது இதே வீடியோவை வைத்து பகிரப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாக கொண்டு பார்த்ததில் இச்செய்தி முற்றிலும் போலியானது என்று புதிய தலைமுறையின் உண்மை சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை வைத்து தொடுக்கப்படும் இத்தாக்குதலானது போலியான ஒரு செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.