ஃபேஸ்புக் பழக்கத்தால் ஏற்பட்ட காதலால் இளம்பெண்ணின் திருமணம் நின்றுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளானர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கண்ணன் அடிக்கடி ஜெய்ஹிந்துபுரம் வந்து இளம் பெண்ணை சந்தித்து பேசியதோடு, இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களும் எடுத்து எடுத்துள்ளனர். பிறகு அந்த பெண்ணுக்கும் கண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கண்ணனுடன் பேசாமல் விலகி சென்றுள்ளார்.
இந்நிலையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை தெரிந்து கொண்ட கண்ணன், ஃபேஸ்புக்கில் போலி பக்கத்தை உருவாக்கி அந்த இளம் பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததோடு அந்த பெண்ணை கல்யாணம் செய்யவிருந்த மணமகனுக்கும் அனுப்பி உள்ளார். இதனை அடுத்து மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இது குறித்து கண்ணனிடம் கேட்டதற்கு, பெண்ணின் தந்தையை தன்னிடம் பேசும் படியும், லட்சக்கணக்கில் பணம் தந்தால் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண் இணையதளம் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு புகார் தெரிவித்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் சேது மணிமாதவன் தலைமையில் தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 2 மணி நேரத்தில் மதுரையில் பதுங்கியிருந்த கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.