செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முனைவர் பானுமதி (74). இவர் சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவில் உள்ள North Carolina பல்கலை-யில் முதுநிலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில், இவரது வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களை மும்பை போலீஸ் எனக் கூறி அவருடன் பேசியுள்ளனர். அப்போது, பானுமதியின் ஆதார் எண் மூலம் ஒரு சிம்கார்டு வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம் கார்டு மூலம் ஆபாச புகைப்படங்கள் பலருக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “வங்கியில் அந்த எண் இணைக்கப்பட்டு கோடிக்கணக்கில் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்” என்றுகூறி அதன் போலியான விபரங்களை பானுமதிக்கு அனுப்பியதோடு அசல் காவல்நிலைய பின்னணியில் வீடியோ காலிலும் பேசி நம்ப வைத்துள்ளனர். இதையடுத்து பானுமதியின் வங்கிக் கணக்கோடு இதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனக் கூறிய அவர்கள், பானுமதியின் வங்கிக் கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனக் கூறி பானுமதியின் வங்கிக் கணக்கில் இருந்த 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தாங்கள் சொல்லிய வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வைத்து, தொடர்பை துண்டித்துள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பானுமதி, தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றக் கொண்ட போலீசார், பானுமதி பணம் செலுத்திய வங்கிக் கணக்குகள் மற்றும் அலைபேசி எண்களை ஆய்விற்கு உட்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தாமரை கண்ணன் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று, துவாரகா பகுதியைச் சேர்ந்த அபிஜித்சிங் என்பவரை கைது செய்து தேனி அழைத்து வந்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 44 ஆயிரம் ரொக்கம், 5 மொபைல் போன்கள், மடிக்கணினி, 103 டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள், 28 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கோடிக்கு ரூபாய்க்கும் மேல் இருப்புள்ள அபிஜித்சிங்-ன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இது போன்ற தகவல்கள் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்தையோ அணுகுமாறும், இது போன்று பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் உதவி எண்: 1930 ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதேபோல் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம் என தேனி சைபர் க்ரைம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.