ஈரோடு அருகே கேரள ஜவுளி வியாபாரியிடம் போலீசார் எனக்கூறி ரூ.29 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில், கள்ள நோட்டுகள் பரிமாற்றத்திற்கு முயற்சி செய்த சம்பவம் அம்பலமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சின் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்சர். இவர், கடந்த 14 ஆம் தேதி தனது நண்பர் அபிலா{டன் ஈரோட்டில் ஜவுளி வாங்கி துபாயில் விற்பனை செய்ய முடிவுசெய்து பெருந்துறைக்கு வந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த அன்சர் மற்றும் அபிலாஷிடம், போலீஸ் உடையில் வந்த சிலர் கருப்பு பண சோதனை எனக்கூறி அவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்தை பெற்றுள்ளனர்.
இதையடுத்து உரிய ஆவணத்தை பெருந்துறை காவல் நிலையத்தில் சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிறகு இருவரும் காவல் நிலையத்திற்கு வந்தபோது, போலீசார் எனக்கூறியது மோசடி எனத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பெருந்துறை காவல் நிலையத்தில் அன்சர் புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் அறிவுத்தலின் பேரில் ஆய்வாளர் மசுதா பேகம் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர்.
தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் புகார்தாரரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். .இதில், இச்சம்பவத்தில் தொடர்புடைய பஷீர், ஜனார்த்தனன் ,பாபு, சுதீர் மற்றும் மகாலட்சுமி ஆகிய ஐந்து பேரை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
பணத்தை இழந்த புகார்தாரர் அன்சர், ஜவுளி வாங்க ஈரோடு வரவில்லை என்றும் அஸ்ரப் என்பவர் மூலம் 29 லட்சத்தை கொடுத்து 6 கோடி ரூபாய் கள்ள பணம் மாற்ற வந்ததும் அப்போது அஸ்ரபின் ஆட்கள் அன்சரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே தங்க பிஸ்கட், இரிடியம் மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மகாலட்சுமி ஊட்டியைச் சேர்ந்தவர் என்பதும் ஜனார்த்தனன் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் மீதமுள்ள மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர்களிடம் இருந்து 24 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார்,இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.