தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.6.5 கோடி சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை அதிமுக அமைச்சராக இருந்தபோது சேர்த்த சொத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி சொத்துகளை சேர்த்ததாக சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு அமலாக்கத்துறையின் விசாரணைக்குச் சென்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேருக்கு ஆகஸ்ட் மாதம் சம்மன் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து தற்போது 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகளை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.6.5 கோடி எனவும் தெரிவித்திருக்கிறது.