தமிழகத்தை உலுக்கிய ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தை உலுக்கிய ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!
தமிழகத்தை உலுக்கிய ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!
Published on

ஈமு கோழி நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபருக்கு கோவை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. இவருடன் லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி ,ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்து ஈமு கோழி நிறுவனத்தில் இரண்டு விதமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை கவர்ந்த அவர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்றனர்.

ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஆறு ஈமு கோழிக் குஞ்சுகள் மற்றும் கொடுத்த பணத்திற்கு மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுப்பதாகவும் முதலீட்டாளர்களிடம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே பணத்தை திருப்பி தராமல் 140 முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் ஒருவரான சென்னிமலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு மாவட்ட பொருளாதர குற்ற பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மொத்தம் 150 சாட்சிகளை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் இன்று அதற்கான தீர்ப்பை வழங்கியது.

இதில் ஈமு கோழிப் பண்ணையை நடத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றிய செல்வக் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். வழக்கில் சேர்க்கப்பட்ட மற்ற நால்வர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com