“அழுத்தத்தால் முடிவை மாற்றி அறிவித்தேன்” - நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்!

“அழுத்தத்தால் முடிவை மாற்றி அறிவித்தேன்” - நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
“அழுத்தத்தால் முடிவை மாற்றி அறிவித்தேன்” - நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
Published on

மதுரை டி.கல்லுபட்டி பேரூராட்சி 10ஆவது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்பட்டன. அதில் 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர். இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதை பார்வையிட்ட நீதிபதிகள், மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும் எனவும், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தேர்தலை உயர் நீதிமன்றம் கண்காணித்த நிலையில், தேர்தல் அதிகாரி எப்படி அரசியல் கட்சி சார்பாக செயல்பட்டார் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணையம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு இருக்க வேண்டும் எனக் கூறி, திருத்திய முடிவை வெளியிட வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை இன்று (மார்ச் 7) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். அதேபோல வீடியோ பதிவை நகல் எடுத்து பாதுகாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது விசாரணைக்காக இன்று வந்தபோது, “அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்துவிட்டேன்” என தேர்தல் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து, “அழுத்தம் கொடுத்தது யார்?” என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com