செய்தியாளர்: காளிராஜன்.த
திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ சேவை மைய உரிமையாளர் ரமேஷ் ராஜாவை திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த சரவணன் மாநகராட்சியில் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். இவர், 2023 ஜூன் மாதம் முதல் மக்கள் வரியாக செலுத்திய ரூ.4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலி ஆவணங்கள் தயாரித்து கையாடல் செய்தார். இந்த விவகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியவரவே இதில் ஈடுபட்ட சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சரவணன், சாந்தி, வில்லியம் சகாயராஜ் ஆகியோர் 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் ராஜா என்பது தெரியவந்தது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ சேவை மையம் நடத்தி வரும் ரமேஷ் ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்நலையில், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார், ரமேஷ் ராஜாவை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவாக நடைபெற்று வருவதால் மேலும் பலர் சிக்குவார்கள் என மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.