உலகக்கோப்பையை இந்திய அணி தவறவிட்ட பிறகு, அதுகுறித்த செய்திகள்தான் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகின்றன. இந்த நிலையில் உலகக்கோப்பை நேரலையை டிவியில் பார்த்த இருவர், வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவருடைய மகன் தீபக். நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் நேரலையை, கணேஷ் பிரசாத், டிவியில் பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சாப்பிடுவதற்கு உணவு சமைத்துவிட்டு கிரிக்கெட்டை பாக்குமாறு தந்தை கணேஷ் பிரசாத்திடம் மகனான தீபக் கூறியதாகத் தெரிகிறது.
மேலும், டிவியையும் தீபக் அணைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணேஷ் பிரசாத் செல்போன் ஜார்ஜ் வயரால் தீபக்கின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே தீபக் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த போலீசார், தீபக்கின் உடலைமீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைசெய்த தந்தை கணேஷ் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: உ.பி.: “பாலியல் வழக்கைத் திரும்பப் பெறு” - மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
இதேபோன்ற சம்பவம் மகாராஷ்டிராவிலும் நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம், அஞ்சங்கான் பாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவின் இங்கோல். இவரும், அன்றைய தினம் மது போதையில் கிரிக்கெட் மேட்சை டிவியில் பார்த்துள்ளார். குடிபோதையில் இருந்த பிரவின் இங்கோலுக்கும் அவரது சகோதரர் அங்கித் மற்றும் தந்தை ரமேஷ் இங்கோல் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இரும்புக்கம்பியால் தன் தம்பி அங்கித் மற்றும் தந்தை ரமேஷை, பிரவின் தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே அங்கித் பலியாகி உள்ளார். பலத்த காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பியைக் கொலை செய்தும், தந்தையைக் கடுமையாகத் தாக்கிய பிரவின் இங்கோல் போலீசார் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் ஒருவர், ”இந்த சம்பவம் கோபத்திலும் குடிபோதையிலும் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு அவர்கள் இருவரும் இறைச்சியைச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவின் தோல்விக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.