சென்னையில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்று, காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வால்டாக்ஸ் சாலையில், கார் ஒன்று தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் காரை மறித்தபோது, அவர்களின் மீது மோதுவது போல் சென்று காரை நிறுத்தியுள்ளார்.
விசாரணை நடத்தியபோது, தானொரு வழக்கறிஞர் என்று கூறி, முகக்கவசம் அணியாமல், மது போதையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
பின்னர், காரில் இருந்த வழக்கறிஞரின் மனைவி, குழந்தையை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.