தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்ட தலைநகர் ஜெகத்தியால் பகுதியில், அரசு தாய் சேய் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அம்மருத்துவமனையில் கடந்த 29.12.2021 ஆம் ஆண்டு, நவ்யஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அன்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்துள்ளது. ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்த மருத்துவர்கள், சில நாட்களில் நவ்யஸ்ரீ குணமடைந்துவிட்டதாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் பிரசவத்திற்கு பிறகான சில நாட்கள் கழித்து, நவ்யஸ்ரீக்கு தொடர்ந்து தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலி தாங்கமுடியாமல், பல்வேறு மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிகிச்சை எடுத்துவந்துள்ளார் அவர். ஆனாலும் தீர்வு கிடைக்காமல், நரக வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஜெகத்தியால் நகரில் உள்ள தனியார் மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின்படி, அவருடைய வயிற்று பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது தான் நவ்யஸ்ரீ வயிற்றுக்குள் காட்டன் துணி ஒரு பண்டல் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண், அங்கிருக்கும் மருத்துவர்களிடம் முறையிட்டுள்ளார். பின்னர் சிகிச்சைக்காக தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முன்னர் அறுவைசிகிச்சை செய்த அதே மருத்துவர்களால், வயிற்றிலிருந்த காட்டன் துணி பண்டல் அகற்றப்பட்டது.
அதற்கு பிறகு இந்த சம்பவம் பற்றி அந்த பெண்ணின் உறவினர்கள், அப்பகுதியின் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.