சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளியை கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்தவரை ஒரு மாதத்திற்கு பிறகு ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பூங்காவனம். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கும் அங்கு கூலித் தொழில் செய்து வரும் குமார் என்ற அழுக்கு குமார் என்பவருக்கும் கடந்த மார்ச் 1ஆம் தேதி இரவு சுமை தூக்குவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரையும் அங்கு இருந்த மற்ற தொழிலாளிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் சமாதானமடையாத குமார் 2-ம் தேதி காலை சென்ட்ரல் ரயில் நிலையம் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் படுத்திருந்த பூங்காவனத்தின் தலையில் பெரிய கல்லை கொண்டு அடித்து தாக்கிவிட்டு குப்பைத் தொட்டியில் கல்லைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றார். ரத்த காயத்துடன் கிடந்த பூங்காவனத்தை ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூங்காவனம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அழுக்கு குமாரை தேடினர்.
சிசிடிவி காட்சிகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தபோதுதான் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிந்தது. அந்த சிசிடிவி காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே பட்டப்பகலில் சர்வசாதாரணமாக கொலை செய்துவிட்டு ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பாதுகாப்பு குறைபாடு என்பதை காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அழுக்கு குமார் எங்கு தப்பி சென்றார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் எதுவும் கிடைக்காமல் ரயில்வே போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த குமார் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவதாகவும் அங்கிருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்ல இருப்பதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் கொலைக் குற்றவாளியான குமாரை பொறிவைத்துப் பிடித்து கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.