செய்தியாளர்: அஜ்மீர் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28). இவர் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனது விருப்பத்துக்கு இணங்கா விட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த செவிலியர், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து செவிலியர் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலக்குண்டு போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர்.
செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.