தேவர் குருபூஜை: போலீஸ் வாகனங்கள் மேலே ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - கைது செய்ய கோரிக்கை

தேவர் குருபூஜை: போலீஸ் வாகனங்கள் மேலே ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - கைது செய்ய கோரிக்கை
தேவர் குருபூஜை: போலீஸ் வாகனங்கள் மேலே ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - கைது செய்ய கோரிக்கை
Published on

144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவர் குருபூஜைக்கு தடையை மீறி வந்து, அரசு வாகனங்கள் மேலே ஏறி குதித்து ஆட்டம் போட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியையடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழாவும் 59-வது குருபூஜை விழாவும் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தேவர் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடையும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி வெளிமாவட்ட மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேவர் குருபூஜைக்கு வந்துள்ளனர். வந்ததுடன் மட்டுமன்றி அங்கிருந்த வட்டாட்சியர் வாகனம், போலீசார் வாகனங்களில் முன்பாக, வாகனத்தின் மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்டு வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தற்போது அதிகம் பரவிவரும் அரசு வாகனங்கள் மீது ஏறி இளைஞர்கள் குதித்து ஆட்டம் போடும் வீடியோவானது, கமுதி மின் வாரியம் அலுவலகத்திற்கும், பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு இடையில் நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது. இப்படி அரசு வாகனத்தில் ஏறியது மட்டுமன்றி, கடந்த 28ம் தேதி போலீஸ் வாகனமொன்றின் பின்பக்க கண்ணாடியை தேவர்குருபூஜைக்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் சேதப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து 29-ஆம் தேதி வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனங்களின் மேற்கூரையில் ஏறி குத்து ஆட்டம் போடுள்ளதும் தெரியவந்துள்ளது.

தேவர் குருபூஜைக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வந்து அசுர வேகத்தில் சாலையில் பசும்பொன் இருக்கும் கமுதிக்கும் அடையாளம் தெரியாத இளைஞர்கள் வந்து பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர். அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக இருந்தாலும் இளைஞர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கண்டித்து, தடையை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து, வாகன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, “தேவர் குருபூஜை விழா எந்த ஒரு பிரச்னை இல்லாமல் நடைபெற்று வருவதால் ஒரு சில இளைஞர்கள் செய்யும் அட்டூழியத்தை தற்போதைக்கு கண்டும் காணாமல் இருக்கிறோம். விழா முடிந்தவுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

இதற்கிடையில் கோயம்புத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் காவல் வாகனத்தின் ஓட்டுநர் லோகநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனத்தை சேதப்படுத்தியது, அரசு ஊழியரை தகாத வார்த்தையால் பேசியது உள்ளிட்ட 3 பிரிவின்கீழ் விஷ்ணு, ஹரிகிருஷ்ணன், அலெக்ஸ் பாண்டி, சிவகுமார், கணேசன், முருகநாதன் உள்ளிட்ட 13 நபர்கள் மீது கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com