டெல்லியில் பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தையை திருடிய பெண்மணியை போலீசார் கைது செய்தனர்.
பிறந்து 25 நாட்களே ஆன தனது ஆண் குழந்தையை காணவில்லை என 25 வயது பெண் ஒருவர் ஆகஸ்ட் 31ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கரி பாவ்லி, கோல் ஹட்டி அருகே உள்ள நடைபாதையில், தனது இரண்டு மகன்கள் மற்றும் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அதிகாலை 4 மணியளவில் எழுந்தபோது தன் குழந்தையைக் காணவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்திருந்தார். தனது குழந்தையை தேட முயன்றதாகவும், ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், ஒரு பெண்மணி அந்த குழந்தையை திருடுவது பதிவாகியிருந்தது. 58 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணியை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், “அந்தப் பெண்மணிக்கு திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மகள்களில் ஒருவர் உத்திரபிரதேசத்தின் ஆக்ராவில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கைது செய்யப்பட்ட பெண்மணி கடந்த இரண்டு நாட்களாக, பாதிக்கப்பட்ட பெண் தனது மகன்களுடன் அருகிலுள்ள பாதையில் தங்கியிருப்பதைக் கண்டார். அதில் ஒரு குழந்தை புதிதாகப் பிறந்ததையும் அவர் கவனித்தார். எனவே குழந்தையை திருட திட்டமிட்டார்” என்பது தெரியவந்தது.