”1% வட்டியில் கடன் தர்றோம்” ..போன் காலை நம்பி ஏமாந்த நபர்.. புதுக்கோட்டை போலீசின் அதிரடி!

”1% வட்டியில் கடன் தர்றோம்” ..போன் காலை நம்பி ஏமாந்த நபர்.. புதுக்கோட்டை போலீசின் அதிரடி!
”1% வட்டியில் கடன் தர்றோம்” ..போன் காலை நம்பி ஏமாந்த நபர்.. புதுக்கோட்டை போலீசின் அதிரடி!
Published on

தனி நபர் கடன் தருவதாக கூறி குறுஞ்செய்தி அனுப்பியதின் பேரில் தொடர்ந்து பேசி புதுக்கோட்டையை சேர்ந்த நபரிடம் இருந்து ரூபாய் 2 லட்சத்தை ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த பெண் மற்றும் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது காவல்துறை.

ஒரு சதவீத வட்டியில் தனி நபர் கடன் தருவதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி, அதன் மூலம் ஆசை வார்த்தை கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த நபரிடம் ரூ.2,03,100 ரூபாய் மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை, புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று கைது செய்து புதுக்கோட்டை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் டெல்லியில் இருந்து கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நபர்களிடம் இது போன்ற ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

ஒரு சதவீத வட்டியில் கடன் தருகிறோம் - திடீர் போன்கால்:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவர் மீன்களை மொத்தமாக பெற்று ஏலம் விடும் தொழில் செய்து வருகிறார். ‌இவருக்கு கடந்த ஜூலை இரண்டாம் தேதி ஒரு சதவீத வட்டியில் தனி நபர் கடன் தருவதாக அவரது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர் அந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு கனிக்குமார் பேசி‌ மீன் ஏலம்விடும் தொழிலை மேம்படுத்த தனக்கு 5 லட்சம் ரூபாய் கடன் வேண்டும் என்று கூறியுள்ளார்.

உங்கள் கணக்கில் வரவு வைக்க 2 லட்சம் அனுப்புங்க!

பின்னர் இரு வேறு செல்போன் எண்களில் இருந்து கனிக்குமாரை கடன் கொடுப்பதாக கூறிய நபர்கள் தனலட்சுமி பைனான்ஸ் இல் இருந்து பேசுவதாகவும் கடன் வழங்குவதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் போட்டோ போன்ற ஆவணங்களை அனுப்பும்படி கூறியுள்ளனர். பின்னர் கனிக்குமாரும் கடன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கேட்ட ஆவணங்களை அவர்கள் கூறிய வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார். இதன் பிறகு டாக்குமெண்ட் ஜார்ஜ், இன்சூரன்ஸ் என்றும் லோன் தொகையை கணிக்குமார் கணக்கில் வரவு வைக்க வரைவோலை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பணம் கட்ட சொன்ன நிலையில், அதை நம்பிய கணிக்குமார் 2 லட்சத்து மூவாயிரத்து 100 ரூபாயை அவர்கள் சொல்லும் கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

ஏமாந்ததை உணர்ந்த கனிகுமார்:

பின்னர் கனிகுமார் பணத்தை செலுத்தியும் அவர் கேட்ட ஐந்து லட்சம் ரூபாய் கடனை கொடுக்காததாலும் கனிகுமாரை தொடர்பு கொண்ட அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், கனிகுமார் தான் ஏமாந்ததை உணர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு பின்னர் கனிக்குமாருக்கு வந்த மொபைல் எண்கள் ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் டெல்லியை சேர்ந்த ரகுபதி(30), முகமது எஸ்தாக்(24), முகமது சாபிஆலம்(43), பாலாஜி(25) மற்றும் பிரியா (36) ‌ உள்ளிட்ட ஐந்து பேர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

டெல்லி விரைந்த புதுக்கோட்டை சைபர் குழு:

மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பலரை டெல்லியில் இருந்து கொண்டு ஏமாற்றி வருவதும் தெரிய வந்ததை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் டெல்லி சென்று கடந்த 15ம் தேதி குற்ற வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரையும் கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புதுக்கோட்டை அழைத்து வந்து இன்று புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஐந்து பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ‌கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பலரையும் ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட ஒரு லேப்டாப், ஆறு ஆண்ட்ராய்டு போன், இரண்டு சிம் கார்டு 6 சார்ஜர்கள் ஒரு ஏடிஎம் கார்டு அக்கவுண்ட் நோட் 9, 5000 ரூபாய் பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிறையில் குற்றவாளிகள் .. போலீசாருக்கு மக்கள் பாராட்டு:

மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் பிடிப்பதில் சவால் நிறைந்ததாக உள்ள நிலையில் டெல்லியில் இருந்து ஆன்லைனில் குறைந்த வட்டியில் பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு டெல்லி சென்று குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com