தனக்கென தனி பாணி வைத்து பல நாட்களாக திருடி வந்த ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ரவி என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லி திலக் நகரை சேர்ந்தவர் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ரவி. இவர் தனக்கென்று தனி பாணியை வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது, இவர் முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள வீடுகளில் மட்டும் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். திருட செல்லும் வீட்டிற்கு வராண்டா அல்லது பால்கனியை பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். திருட செல்லும்போது சிவப்பு நிற டி - சர்ட் அல்லது ஜெர்சியை பயன்படுத்தியுள்ளர்.
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் அடிக்கடி பணம், நகை திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில், டெல்லி போலீசார் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் ரவியை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டிஜிபி மோனிகா பரத்வாஜ் கூறுகையில், “நாங்கள் திருட்டு நடந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் அனைத்து தகவல்களையும் சேகரித்து குற்றவாளிகளின் பட்டியலை ஆய்வு செய்தோம். இறுதியில் புகார் அளிக்கப்பட்ட அனைத்து திருட்டுகளும் ஒரே பாணியில் இருந்ததை கண்டறிந்தோம். இதையடுத்து சுபாஷ் நகர் பசிபிக் மாலில், ஸ்பைடர் மேன் என்ற ரவியை கைது செய்தோம்.
விசாரணையில் பால்கனியில் ஏறி அறைக்குள் செல்ல வடிகால் குழாய்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 7 திருட்டு வழக்குகளில் ரவி 6 சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் பிரிவு 380 கீழ் கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் இந்த 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.