தற்போது செல்போன் மோகம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை கைகளில் செல்போன் இல்லாமல் யாரையும் பார்க்க முடிவதில்லை. வீடியோ கேம், கார்ட்டூன் என்று போனுக்கு அடிமையாக்கப்பட்ட மழலைகள் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருப்பர்.
செல்போன் வேண்டும் எனும் மோகம் எந்தளவுக்கு உள்ளதோ, அதைவிட அதிகமாக என்ன மாடல் போன் வைத்திருக்கிறோம், எவ்வளவு அதிக விலையுள்ள போன் வைத்திருக்கிறோம் என்பதும் முக்கியமாக இருக்கிறது. இதில் ஐபோன் மோகம், பலருக்கும் உண்டு. சிலரெல்லாம் நினைத்ததை வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஊறிப்போய், திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு தவறான பாதையை தேர்ந்தெடுப்பதுண்டு. அப்படியான ஒரு சம்பவம்தான் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
யோவிகா சவுத்ரி என்பவர் டெல்லியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியே பைக்கில் சென்ற இரு கொள்ளையர்கள் அவரது கையில் இருக்கும் ஐபோனை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியை சவுத்ரி, ஒருகட்டத்தில் ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார். தொடர்ந்து வெகுதூராம் அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான அவர், ஒருகட்டத்தில் தன் முயற்சியை கைவிடவே அக்கொள்ளையர்கள் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து ஆசிரியையை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை மேக்ஸ் சாகேத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூக்குப்பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்ட அவருக்கு, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. தற்போது குணமாகி வருகிறார் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.
சவுத்ரியிடமிருந்து செல்போனை பறித்து சென்ற கொள்ளையர்கள் மீது சாகேத் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Jenetta Roseline S