மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப ஆதரவு என்ற பெயரில் வெளிநாட்டினரை ஏமாற்றும் போலி கால் சென்டர் ஒன்றை நடத்தியதாக டெல்லி காவல்துறை 17 பேரை கைது செய்துள்ளனர்.
டெல்லி ராஜோரி கார்டன் என்ற பகுதியில் மைக்ரோசாப்ட் ஆதரவு என்ற பெயரில் வெளிநாட்டினரை ஏமாற்றும் போலி கால் சென்டர் ஒன்று இயங்கி வருவதாக போலீசார் புகார் வந்தது. அதன்பிறகு, போலீசார் குறிப்பிட்ட வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் ஒரு போலி கால் சென்டரை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் அனிஷ் ராய் கூறுகையில், “சோதனையின் போது அந்த நபர்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் மருத்துவரை ஏமாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த அழைப்பு போலீஸாரால் எடுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு மோசடி குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தில்வாரி என்ற முக்கிய குற்றவாளிதான் அந்த போலி கால் செண்டரை கடந்த 3 வருடமாக நடத்தி வந்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்களின் கணிகளுக்கு பாப் ஆப்களை அனுப்புகின்றனர். பின்னர், கணிணிகளை சரிசெய்ய மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப உதவிக்கு அழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். அவ்வாறு அவர்கள் கால் செய்யும்போது அவர்களிடம் தூரத்தில் இருந்து இயக்குவதற்கான உரிமையை கேட்கின்றனர்.
அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில், மால்வேர், ஸ்பைவேர்கள் போன்ற ப்ரோகிராம்கள் அவர்களது கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் பாதிக்கப்பட்டவரிடம் கூறுவார்கள். உடனடி தீர்வு எடுக்கப்படாவிட்டால், அவர்களின் வங்கி நற்சான்றிதழ்கள் ரத்து செய்யப்படலாம் என்று பாதிக்கப்பட்டவருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்டபடி தொகையை செலுத்த ஒப்புக்கொண்டாரேயானால் அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷெல் நிறுவனங்களுக்கு இந்த கட்டணம் செலுத்தப்படுகிறது. தொகை கிடைத்தவுடன் தற்போது கணினி சரியாகிவிட்டதாக தெரிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக, சாஹில் திலாவரி (27), சேஹாஜ் சோயின் (23), சைதன்யா சுக் (25), யோகேஷ் சோப்ரா (22), நிதின் குமார் (23), குர்தித் சிங் (25), சுகேஷ் குமார் (31), நமன் அரோரா (23), சஞ்சோய் பால்(23), தீபேந்திர சிங் (27), சுதிர் சர்மா (32), மாயங்க் திவாரி (35), கௌரவ் சோமி (32), அவ்தார் சிங் (30), சைரல் சாம் டேவிட் (23) ஆயுஷ் சவுத்ரி (28), உமாங் மஞ்சந்தா(25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.