டெல்லி டாக்டர் கொலை வழக்கில் அவரது நண்பரான மற்றொரு டாக்டர் சந்திர பிரகாஷ் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய டெல்லியின் ரஞ்சீத் நகரிலுள்ள குடியிருப்பில் 25 வயது மதிக்கதக்க பெண் டாக்டர் கரிமா மிஸ்ரா கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்தக் குடியிருப்பில் கரிமா, சந்திர பிரகாஷ் வர்மா மற்றும் அவரது மற்றொரு நபரும் கடந்த ஜனவரி மாதம் முதல் வசித்து வந்தனர்.
கரிமா கொலை செய்யப்பட்டிருந்தப் போது அவருடன் தங்கியிருந்த மற்றொரு நண்பர் வீட்டில் இருந்தார். ஆனால் சந்திர பிரகாஷ் வர்மாவை காணவில்லை. அவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் சந்திர பிரகாஷ் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட தனிப் படை காவலர்கள் அவரை கைது செய்தனர்.
ஏற்கெனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு கரிமாவிற்கும் சந்திர பிரகாஷ் வர்மாவிற்கும் பிரச்னை ஏற்பட்டு பின்னர் சமாதனமாக சென்றுள்ளனர். இருவரும் டெல்லியுள்ள அரசு மருத்துவமனையில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இருப்பினும் கடந்த மாதம் கரிமா தனது மேற்படிப்பிற்காக வேலையை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.