பள்ளி கழிவறையில் 11 வயது சிறுமியை அதே பள்ளியை சேர்ந்த மேல்நிலை வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. பள்ளியின் ஆசிரியர் குற்றத்தை மறைத்ததாக சிறுமியின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நடந்திருக்கும் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை ஜூலை மாதம் நடந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் இந்த வாரம் தான் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி மகளிர் ஆணையம் இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தி உள்ளது.
ஆசிரியர் குற்றத்தை மறைக்க முயன்றதாக சிறுமியின் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் கூறுகையில், "டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்குள் 11 வயது மாணவியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் தீவிரமானது. தனது பள்ளி ஆசிரியர் விஷயத்தை மூடிமறைக்க முயன்றதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். தலைநகரில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகள் கூட பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தச் சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் அளித்த அறிக்கையில், ஜூலை மாதம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மூத்த மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் அவர்கள் ஒரு கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று கழிவறை கதவை உள்ளிருந்து பூட்டிவிட்டு, அவளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கியதாக கூறியுள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை ஒரு ஆசிரியரிடம் தெரிவித்தபோது, சிறுவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், விஷயம் மூடிமறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டதாக அவர் கூறினார் .
இந்த விவகாரத்தில் பள்ளியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, பள்ளிக்கு எந்த புகாரும் வரவில்லை என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசியிருக்கும் பள்ளி நிர்வாகம், “பள்ளி அலுவலகம் பிரச்னையை விசாரித்து வருகிறது. இச்சம்பவம் குறித்த சிறுமியோ அல்லது அவரது பெற்றோரோ நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. சம்பவத்திற்குப் பிறகு நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுப்பப்படவில்லை. போலிசாரின் விசாரணைக்குப் பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், டெல்லி காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைக்க விரும்புகிறோம்" என்று பள்ளியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆசிரியர் ஊழியர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி மகளிர் ஆணையம் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை காவல்துறையிடம் கேட்டுள்ளது. மேலும் ”இந்த விஷயத்தைப் பற்றி பள்ளி அதிகாரிகள் எப்போது அறிந்தார்கள், அவர்களால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்குமாறு பள்ளி முதல்வரிடம் ஆணையம் கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்குமாறு பள்ளியைக் கேட்டுள்ளதுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.