பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தை சேர்ந்த மகாதலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் சுபோத் தாஸ் என்பவர் அப்பகுதியை சேர்ந்த பிரமோத் சிங் என்பவரிடம் ரூ.1500 வட்டிக்கு வாங்கியுள்ளார். பின்னர், பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், கடன் கொடுத்த பிரமோத் சிங் ,”தான் கொடுத்த பணத்தைவிட அதிக பணம் வேண்டும் இல்லையெனில் இவரின் மனைவியை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்துவேன்” என்று மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசில் அப்பெண் ஏற்கனவே புகாரும் அளித்துள்ளார்.
இதன் விளைவாக கோபமடைந்த பிரமோத் சிங் அப்பெண்ணை அவரின் வீட்டிலிருந்து கடத்தி அவரை நிர்வாணமாக்கியதோடு கொடூரமாக தாக்கியுள்ளார். அத்துடன் நிற்காமல், தனது மகன் அன்ஷூவை வைத்து அப்பெண்ணின் வாயில் சிறுநீரும் கழித்து மிக கொடூரமாக சித்தரவதை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாது 4 பேரை வைத்தும் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு அப்பெண் அப்பகுதியில் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு சென்று நடந்ததை கூறவே அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் சகோதரர் அசோக் தாஸ் கூறுகையில், “நாங்கள் இவரை தேடி சென்றபோது இவர் எங்களை நோக்கி நிர்வாணமாக ஒடி வந்து நடந்ததை கூறினார். எங்களை தாக்கியவர்கள் இக்கிராமத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். ஆனால், இப்பகுதியில் பட்டியலின மக்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். நாங்கள் மிகவும் அச்சத்தில் வாழ்கிறோம். சிறிது காலம் இப்பகுதியை விட்டு வேறு இடம் சென்று வாழ நினைக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பாட்னா மாவட்ட மூத்த எஸ்.பி ராஜீவ் மிஸ்ரா கூறுகையில், “நாங்கள் இதுகுறித்து ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டும் வருகிறோம். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இது குறித்து கூறுகையில் “ குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.