வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது வெட்டி கொல்லப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் எரிந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த அறைகளில் மேலும் இரண்டு சடலங்கள் எரிந்தும் எரியாமல் கிடக்கின்றன. கடலூரில் அரங்கேறிய இந்த கொடூரத்தின் பின்னணி என்ன? என்ன நடந்தது? என்று பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் காராமணி குப்பத்தைச் சேர்ந்த ராஜாராம் நகரில் வசித்து வந்தவர்தான் கமலேஸ்வரி. இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இளைய மகன் மற்றும் பேரனோடு ராஜாராம் நகரில் வசிந்து வந்தார் கமலேஸ்வரி. மகன் சுகந்த் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு Work from home முறையில் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். ஊரில் யாரிடமும் எந்த பிரச்னையையும் வைத்துக்கொள்ளாத இந்த குடும்பம் மிகவும் அமைதியான முறையில் வாழ்ந்து வந்துள்ளதுனர். இந்நிலையில்தான், கடந்த 15ம் தேதி காலையில், பூட்டப்பட்ட இவர்களது வீட்டில் இருந்து புகை வரத்தொடங்கியுள்ளது.
சடலங்கள் எரியும் நாற்றத்துடன் புகை வரத்தொடங்கியதால், அப்பகுதியில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பூட்டப்பட்ட கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது, கதவின் அருகிலேயே கமலேஸ்வரி வெட்டி கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதைப் பார்த்து போலீஸார் அதிர்ந்துள்ளனர். அடுத்தடுத்த அறைகளில் பார்த்தபோது மகன் சுகந்த மற்றும் பேரன் நிஷாந்த் ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டு தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டு கிடந்துள்ளனர். மூவரும் வெட்டி கொலை செய்யப்பட்டதில் வீடு முழுவதும் ரத்தக்கறையாக காட்சியளித்துள்ளது.
ஊருக்குள் இருக்கும் ஒரு வீட்டில் எப்படி இப்பட்டப்பட்ட ஒரு படுகொலை அரங்கேறியது என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். அதில், 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்து மூவரும் பண்ருட்டிக்கு கிளம்பிச்சென்றுள்ளனர். வீட்டில் வேலை செய்பவரிடம் வேலையை முடித்துவிட்டு வீட்டை பூட்டிச்செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அவரும் அப்படியே செய்ய, மறுநாள் காலை வீடு வந்து பார்த்தபோது வீடு பூட்டியபடி கிடந்துள்ளது. சரி இன்னும் வரவில்லைபோலும் என்று அவரும் திரும்பிச்சென்ற நிலையில் திங்கட்கிழமை காலையில்தான் அரங்கேறிய கொடூரம் வெளியே வந்துள்ளது. போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு வாக்கில் மூவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் வெளியே வராததால், 2 நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வாக்கில் உடல்களின் மீது துணிகளை போட்டு தீவைத்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
வீட்டில் இருந்த கமலேஸ்வரின் போன் மற்றும் சுகந்தின் போன், லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் மர்ம நபர்களால் ஃபார்மட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர் தடையவியல் நிபுணர் என அனைவரும் வீட்டுக்குள் சல்லடை போட்டு கொலையாளிகளின் தடயங்களை திரட்டியுள்ளனர். ஆனாலும், போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், 5 தனிப்படைகள் அமைத்து, இந்த கொடூர கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுகந்த் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, சுகந்த் முதலில் திருமணம் செய்துகொண்ட மனைவி ஒருசில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியில் இருந்த போது, அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமல் livingல் சிறிது காலம் வாழ்ந்துள்ளார். இவர்களுக்கு பிறந்தவர்தான் சிறுவன் நிஷாந்த். அவரும் ஒரு கட்டத்திற்கு பிறகு பிரிந்து சென்ற நிலையில், தாய் மற்றும் மகனுடன் வாழ்ந்துள்ளார் சுகந்த். இந்த கொலையில், சுகந்த living இல் இருந்த பெண்ணுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்தபோது, அவர் நேரடியாகவே போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து தனக்கு எந்த தொடர்பும் இல்ல என்று விளக்கம் கொடுத்ததோடு, எப்போது அழைத்தாலு விசாரணைக்கு வரத்தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
தகவல்களைத் தொடர்ந்து, வீட்டிற்கு பேப்பர் போடுபவர்கள், பால் போடுபவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் தெரு வழியாக அடிக்கடி நடந்து செல்பவர்கள் என்று அனைவரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை. இதில் ஒரு தனிப்படை, சுகந்த் பணியாற்றிய ஹைதராபாத் நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்நிறுவனம் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. மெயில் மூலமாக தகவல்களை கேட்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் கமலேஸ்வரி உறவினர்கள் மற்றும் அவர்கள் ஏற்கனவே வசித்த நெல்லிக்குப்பம் பகுதிகளிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு அவரது உடல் கமலேஸ்வரின் முதல் மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் வைத்து இறுதிச்சடங்கும் முடிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அதிலும் எதுவும் தகவல் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் கமலேஸ்வரி வீட்டின் அருகே உள்ள நபரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் அங்கிருந்து பேசப்பட்டிருப்பதாகவும், அதிலும் தற்போது காவல்துறை ஒவ்வொரு தொலைபேசி எண்ணாக விசாரிக்க தொடங்கியுள்ளனர். கமலேஸ்வரியின் வீட்டின் அருகே ரத்தக்கறைகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். உடல்கள் மீட்கப்பட்டு மூன்று நாள் கடந்தும் இதுவரை தடயங்கள் கிடைக்காத காரணத்தினால் தடைவியல் நிபுணர்கள் இன்றும் அந்த வீட்டை முழுவதுமாக சல்லடை போட்டு தடயங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
அமைக்கப்பட்ட ஐந்து தனிப்படை போலீஸாரும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்தவரக்ளே இந்த கொடூர கொலைகளை செய்தார்களா அல்லது வேறு யாரும் செய்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, கமலேஷ்வரியின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கழிவறை அருகிலும் ரத்தகறைகள் இருந்ததால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, மனைவி, மகன் மற்றும் மகள் என இந்த குடும்பத்தைச் சேர்ந்த நால்வரிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஸ்ரீதர்