கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடக்க முடியாத முதியவரை சாலையில் வீசி சென்ற கொடூரம் நடந்தேறியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடக்க முடியாத நிலையில் முதியவர் ஒருவர் சாலையோரம் கிடந்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரிடம் வினவியபோது தன்னை திண்டுக்கல் பகுதியில் உள்ள ஆசிரம ஊழியர்கள் காரில் கொண்டு வந்து இங்கு விட்டு சென்று விட்டதாக கூறியுள்ளார். உடனே அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த முதியவரிடம் கேட்டபோது திண்டுக்கல்லில் உள்ள அன்னை ஆசிரமத்தில் ஐந்து மாதமாக இருந்து வந்ததாகவும் சமீபத்தில் வெளியே செல்கிறேன் எனக் கூறியதால் தன்னை ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் ஆசிரமத்தில் இருக்க மறுத்ததால் தன்னுடன் நான்கு முதியவர்களை அழைத்து வந்து திருப்பூர், கோவை பகுதிகளில் சாலையில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தின் கிளை நிறுவனமான திண்டுக்கல் ஜோசப் கருணை இல்லத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னை துன்புறுத்துகிறார்கள் என ஊடகங்களில் பேட்டி கொடுத்தவர் என்பதும் புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது.