பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருட்டு: ஃபெடரல் வங்கி நகைக் கொள்ளை அதிர்ச்சி

பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருட்டு: ஃபெடரல் வங்கி நகைக் கொள்ளை அதிர்ச்சி
பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருட்டு: ஃபெடரல் வங்கி நகைக் கொள்ளை அதிர்ச்சி
Published on

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ஃபெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவான ஃபெட் பேங்கில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அங்கு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதல் காவல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் இந்த வங்கிக் கொள்ளை தொடர்பான விவரங்களை கண்டறிய 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோப்ப நாய்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். அது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் சந்தேகப்படும்படியான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததா என போலீசார் விசாரித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பீடு தொடர்பாக கணக்கெடுப்பும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கி ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்டமாக தகவல்கள் வெளிவந்தன. மேலும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல காவல் ஆணையர் அன்பு அளித்த பேட்டியில், ’’இதே வங்கியில் தற்போது வரை வேலை செய்துகொண்டிருந்த முருகன் என்ற ஊழியர்தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டோம். வங்கியில் வேலை செய்யும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது விரைவில் கண்டறியப்படும்.

விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் எதுவும் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதும், குற்றவாளிகளை பிடிப்பதும் எளிமையானதுதான். இதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com