”ஆணவக்கொலைக்கு திட்டமிடும் பெற்றோரிடமிருந்து காப்பாற்றுங்கள்”- கோரிக்கை வைக்கும் தம்பதி

”ஆணவக்கொலைக்கு திட்டமிடும் பெற்றோரிடமிருந்து காப்பாற்றுங்கள்”- கோரிக்கை வைக்கும் தம்பதி
”ஆணவக்கொலைக்கு திட்டமிடும் பெற்றோரிடமிருந்து காப்பாற்றுங்கள்”- கோரிக்கை வைக்கும் தம்பதி
Published on

காதல் திருமணம் செய்த தங்களை ஆணவக் கொலை செய்ய பெற்றோர்கள் திட்டமிடுவதாகக் கூறி, தங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி தமிழக முதல்வர், காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு தம்பதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் - நல்லம்மாள் ஆகியோரின் மகன் பிரேம்குமார். இவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த மொட்டையன் - அமராவதி ஆகியோரின் மகள் பொன்மணி. இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இந்த பிரேம்குமார் - பொன்மணி இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் பெண்ணின் பெற்றோர், மகளின் விருப்பத்திற்கு மாறாக வேறு நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதனால் 12-ஆம் தேதியன்று பொன்மணி, காதலர் பிரேம்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி கோவை மருதமலை முருகன் கோயிலில் திருமணம் செய்துள்ளார். 

இவர்கள் திருமணம் செய்து கொண்ட தகவலை தெரிந்து கொண்ட இரு வீட்டு பெற்றோரும் தம்பதியினரை கண்டுபிடித்து ஆணவக்கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக இருவரும் தெரிவிக்கின்றனர். எனவே தங்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்த மனு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தம்பதியினர் பாதுகாப்பு வேண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளனர்.

முன்னதாக ஏற்கெனவே கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலையத்தில், ‘எனது மகளை காணவில்லை’ என்று பெண்மணியின் தந்தை புகார் அளித்திருந்துள்ளார். அந்தப் புகார் மனு அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தோகைமலை காவல் நிலையத்திற்கு தம்பதியினரை அழைத்துச்செல்ல அந்த பகுதி காவல்துறையினர் கோவை வந்து கொண்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு தம்பதியினர் தரப்பிலிருந்து, “நாங்கள் தோகைமலை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால், விசாரணை முடிந்து காவல் நிலையம் விட்டு வெளியே வந்தவுடன் கண்டிப்பாக இரு வீட்டு பெற்றோரும் எங்களை ஆணவக்கொலை செய்து விடுவார்கள். எனவே எங்களின் பாதுகாப்புக்காக கோவையிலேயே விசாரணை நடத்தவும். இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடத்தில் மனு அளித்தும் உள்ளோம்” என தம்பதியினர் தமிழக முதல்வர் அவர்களுக்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com