புத்தாண்டு இரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோடி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரப்பரப்பாக காணப்படும் பெங்களூர் நகரத்தில், ஆண்டுந்தோறும் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பல்வேறு குற்றங்கள் நடைபெறுவது வழக்கமாக மாறி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பெங்களூரில் புத்தாண்டு இரவு, இந்திரா நகர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோடிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் இரண்டு ஜோடிகள், சாலையில் நின்றுக் கொண்டிருக்கும் கும்பலைக் கடந்து செல்கின்றனர். அப்போது தவறுதலாக அங்குள்ள இளைஞர் ஒருவரின் மீது வண்டி இடித்து விடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை சரமாரியாக தாக்குகின்றனர். இதனால், அந்த இளைஞர் கீழே விழுந்து விடுகிறார். அப்போதும், அவரை விடாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இத்தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான அமித் மால்வியா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கர்நாடகாவில் சித்தராமையாவின் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதனுடன் பெங்களூர் நகரம், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக மாறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.