சென்னை: தானாகவே சிக்கிக் கொண்ட கள்ள நோட்டு கும்பல் - நடந்தது என்ன? சுவாரஸ்ய தொகுப்பு

சென்னை: தானாகவே சிக்கிக் கொண்ட கள்ள நோட்டு கும்பல் - நடந்தது என்ன? சுவாரஸ்ய தொகுப்பு
சென்னை: தானாகவே சிக்கிக் கொண்ட கள்ள நோட்டு கும்பல் - நடந்தது என்ன? சுவாரஸ்ய தொகுப்பு
Published on

200 ரூபாய் நோட்டுக்களை கலர் பிரிண்ட் எடுத்து கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் விடமுயன்ற திமுக பிரமுகர் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை திரைப்பட பாணியில் கைது செய்தது மணலி புது நகர் போலீஸ். தானாகவே சிக்கிய கொண்ட கள்ள நோட்டு கும்பல். நடந்தது என்ன? சுவாரஸ்ய தொகுப்பு இதோ...

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கள்ளநோட்டு புழக்கம் என்ற வார்த்தையைக் கேட்பது குறைந்திருப்பதாகத் தெரிகிறது. புதிய நோட்டுகள் வெளிவந்த பிறகு கள்ள நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடுவது, கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட முயல்வது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைதாகும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதைபோலதான் ஒரு மோசடி கும்பல் சென்னையை அடுத்த மணலி புது நகரில் காவல்துறையிடம் சிக்கி உள்ளது. சென்னையை அடுத்த மணலி புது நகர் 46-வது பிளாக் பகுதியில் ஒரு வீட்டில் வாக்குவாதத்தில் சிலர் ஈடுபடுவதும், அதிக சத்தம் கேட்பதாகவும் கூறி அருகில் வசிப்பவர்கள் மணலி புது நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வந்து கண்காணித்தபோது 6 பேர் கும்பல் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.

சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்களோ? என நினைத்து மணலி புது நகர் காவல் ஆய்வாளர் கொடிராஜ் தலைமையிலான போலீசார் திரைப்பட பாணியில் அந்த வீட்டிற்கு அதிரடியாக துப்பாக்கியோடு நுழைந்தனர். போலீசைக் கண்டதும் 6 பேரும் தப்ப ஓட முயன்றிருக்கின்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் கைதுசெய்தனர். அந்த வீட்டை சோதனை செய்தபோது 200 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்ததும், சோதனையில் அது கலர் பிரிண்ட் எடுத்து வைக்கப்பட்டுள்ள கள்ள நோட்டுக்கள் எனவும் தெரியவந்திருக்கிறது.

மேலும், அங்கிருந்த 3 கலர் பிரிண்டர்கள், கார் ஆகியவற்றை மணலி புது நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கலர் பிரிண்ட் எடுத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 11.50 லட்சம் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரையும் போலீசார் காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இம்தியாஸ், திருவொற்றியூர் தாங்கலைச் சேர்ந்த ஜான் ஜோசப், வியாசர்பாடியைச் சேர்ந்த ரசூல்கான், செங்குன்றத்தைச் சேர்ந்த முபாரக் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைதான யுவராஜ், தான் வசித்துவந்த பகுதியிலேயே தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலத்தில் அவருக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் பிரச்னையில் சிக்கியதாக தெரிகிறது.

இதனால் தண்ணீர் கேன் விநியோகம் தொழிலை யுவராஜ் செய்து வந்துள்ளார். தன்னுடைய வறுமை குறித்து நண்பரான ரசூலிடம் தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டுக்களை கலர் பிரிண்ட் அடித்து புழக்கத்தில் விட்டால் அதிக பணம் கிடைக்கும் என்றும், ரூ. 11 லட்சம் தந்தால் ரூ. 60 லட்சம் கிடைக்கும் என யுவராஜின் ஆசையை தூண்டிவிட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து 11 லட்ச ரூபாயை ரஷூலிடம் கொடுத்துள்ளார் யுவராஜ். பிறகு ரூபாய் நோட்டுக்களை கலர் பிரிண்ட் எடுப்பதற்காகவே யுவராஜ் மணலி புதுநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரசூலுக்கும் அவரது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். சுமார் 6 மாதங்களாக இந்த வீட்டில் ரசூல் தனது நண்பர்களோடு தங்கியிருந்து 200 ரூபாய் நோட்டுக்களை கலர் பிரிண்ட் எடுத்து அடுக்கி வைத்திருக்கின்றனர்.

நேற்று அவர்களின் வீட்டிற்கு யுவராஜ் வந்துள்ளார். அங்கே கள்ள நோட்டுகள் ரூ. 8 லட்சம் அடுக்கி வைத்திருந்திருக்கிறது. ஆனால் அதனை புழக்கத்தில் விடாமல் வைத்திருந்ததால் யுவராஜ் கோபமடைந்து ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரூ. 10 லட்சம் தன்னிடம் வாங்கி 6 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை திருப்பி தரவில்லை எனவும் ரூ. 60 லட்சமாகவும் தரவில்லை எனவும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடவில்லை எனவும் யுவராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரூ. 200 பிரிண்ட் அடிப்பதை நிறுத்திவிட்டு ரூ. 500 கலர் பிரிண்ட் எடுக்கும்படி யுவராஜ் அங்கிருந்த ரசூலுடன் சண்டையிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டுத்தான் அருகில் வசிப்பவர்கள் மணலி புது நகர் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். போலீஸ் வந்தபிறகே அங்கு தங்கி இருந்தது கள்ள நோட்டு கும்பல் என்பதே தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான ரசூல் மீது ஏற்கெனவே பட்டினப்பாக்கம், போரூர் உள்பட 3 காவல் நிலையங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கலர் பிரிண்ட் மிஷின்கள், பேப்பர் பண்டல்களை பாரிமுனையில் ஒரு கடையில் ரசூல் வாங்கி உள்ளார். ரசூல், முபாரக் ஆகியோர் செங்குன்றத்தில் உள்ள அமைப்பு ஒன்றில் உள்ளனர். யுவராஜ் திமுகவில் வண்ணாரப்பேட்டை 53-வது வட்ட கழக செயல் வீரராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபர் ஒருவர் தலைமறைவாக உள்ளார். செங்குன்றத்தைச் சேர்ந்த அவரது விவரத்தை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. அந்த முக்கிய குற்றவாளியை மணலி புது நகர் போலீசார் தேடிவருகின்றனர்.

கைதான கும்பல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட வில்லை என விசாரணையில் தெரியவந்தாலும் 6 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபிறகு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என மணலி புது நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

- செய்தியாளர் R. சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com