500 ரூபாய் கள்ள நோட்டு அடிப்பதில் வாக்குவாதம்: போலீசாரிடம் சிக்கிய கள்ள நோட்டு கும்பல்
சென்னை மணலி புதுநகர் பகுதியில் கள்ள நோட்டு கும்பலை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னை மணலி புதுநகர் பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சிலர் பதுங்கி இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 200 ரூபாய் கள்ள நோட்டுக்கள், 3 கலர் பிரிண்டர்கள், 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், யுவராஜ், பிரபாகரன், இம்தியாஸ், ஜான் ஜோசப், ரசூல் கான், முபாரக் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், 6 பேரும் வேலையின்றி இருந்ததால், ஆந்திராவைச் சேர்ந்த அனந்தராமன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டதும், ₹500 நோட்டுகள் அச்சடிப்பது குறித்து அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பொது மக்களுக்கு தெரியவரவே இந்த கள்ள நோட்டு கும்பலை கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல் துறை தரப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.