சென்னை கொளத்தூர் பகுதியில் கட்டுமான தொழிலாளி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 கல்லூரி மாணவர்கள் உட்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் புத்தகரம் சுபாஷ் நகரில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடை அருகே வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த புழல் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (27) என்பதும், அவரது தாய்மாமனான முருகவேல் என்பவரிடம் கட்டட வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்தது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து பழி தீர்க்கும் விதமாக முருகவேலின் மகன் அஜித் குமார், தனது நண்பர்களான ராஜேஷ்குமார், அசோக் ஆகியோர்களுடன் சென்று ஆறுமுகத்தை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புழல் காவல் துறையினர் தப்பி ஓடிய 3 பேரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், குரோம்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த கல்லூரி மாணவர்களான அஜீத்குமார் (21), ராஜேஷ் குமார் (19) மற்றும் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அசோக் (21) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 2 கத்தி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.