ஃபேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்ததாக பெண் மீது புகார்

ஃபேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்ததாக பெண் மீது புகார்
ஃபேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்ததாக பெண் மீது புகார்
Published on

ஃபேஸ்புக், டிக்-டாக் மூலம் இளைஞர்களை வசியப்படுத்தி பலரை திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றியதாக பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் என்பவரின் மகன் பாலகுரு (26). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் ஃபேஸ்புக்கில் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து செல்போனில் நட்பு வளர்ந்த நிலையில், மீரா காதல் ஆசை வார்த்தை கூறியதன் பேரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததாக கூறும் பாலகுரு, மீராவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.


கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, சில வாரங்களில் அப்பெண்ணின் பெயர் மீரா இல்லை என்பதும், அவரது பெயர் ரஜபுநிஷா என்பதும், இவர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் காதல் எண்ணத்தில் இருந்த பாலகுரு அப்பெண்ணுடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வேலை நிமித்தமாக பாலகுரு வெளியூர் சென்றவுடன் அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சந்தேகமடைந்த பாலகுரு அப்பெண்ணின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் ரஜபுநிஷாவிற்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பாலகுரு ரஜபுநிஷாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து தன் தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரஜபுநிஷா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் தன்னை நான்காவதாக ரஜபுநிஷா திருமணம் செய்து கொண்டதும், தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் சென்று ரஜபுநிஷா குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

வீட்டை விட்டு செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறும்  பாலகுரு இதுகுறித்து ரஜபுநிஷாவின் தாயார் மும்தாஜிடம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், அப்போது பணத்திற்காக தன்மகள் பலபேரை திருமணம் செய்துள்ளதாகவும், நீ ஒதுங்கிக்கொள் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறி மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு புகார் மனு அளித்துள்ளார்.


மனுவில் ஏமாற்றிச் சென்ற பெண்ணைக் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் டிக்-டாக்கில் வீடியோ பதிவுகளை பதிவிட்டு, அதற்கு சிறந்த கமெண்டுகளை பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் இதுபோன்ற பெண்களிடம் தன்னைபோல் இளைஞர்கள் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக பாலகுரு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com