மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துக்கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை கல்லூரி தாளாளர், நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் கேட்டரிங் மற்றும் செவிலியர் கல்லூரியின் தாளாளர் டாஸ்வின் ஜான் கிரேஸ், மாணவிகளிடம் வாட்ஸாப் காலில் நிர்வாணமாக பேசி ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்தும், இனிமேல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து ஆட்சியர் மேகநாத ரெட்டி சமீபத்தில் நேரில் விசாரணை நடத்தினார். இதனிடையே, தங்களுக்கு இந்த கல்லூரியில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி தங்களை வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரியின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை நீதிமன்றத்தில் தாளாளர் டாஸ்வின் ஜான் கிரேஸ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரியின் வங்கி கணக்கு முடக்கப்படும் என ஆட்சியர் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில் இதுவரை 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தாளாளர் பெயரில் இருந்த 2 வங்கி கணக்குகளும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கு என மொத்தம் 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- செய்தியாளர்: செந்தில்குமார்