கோவையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஒரு குடியிருப்பில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு வசிக்கும் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதை நேரில் பார்த்த அந்த குழந்தையின் தந்தை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், இந்த வழக்கு ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதையடுத்து விசாரணை முடிவடைந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.