“புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?”..கோவை மாணவி தற்கொலையில் எழும் கேள்விகள்!

“புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?”..கோவை மாணவி தற்கொலையில் எழும் கேள்விகள்!
“புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?”..கோவை மாணவி தற்கொலையில் எழும் கேள்விகள்!
Published on

கோவையை சேர்ந்த 17 வயது மாணவியொருவர் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை.

கோவை தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறொரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் அப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனாலேயே தங்கள் மகள் தற்கொலை செய்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது. அதைத்தொடர்ந்து மாணவி தற்கொலை விவகாரத்தில் புலன் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை. முதற்கட்டமாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். அக்கடிதத்தை துண்டு சீட்டு என்றே காவல்துறையினர் குறிப்பிடும் நிலையில் அந்த கடிதத்தை எழுதியது யார் என்பதை கண்டறிவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் ‘மாணவியின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது மற்றும் குற்றத்தை மறைத்தது’ தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அச்சத்தின் காரணமாக முதலில் செல்போனை ஸ்விட்ச் - ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாக சொல்லப்பட்ட தலைமை ஆசிரியரை அவரின் ஃபோன் சிக்னலை வைத்தே காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

பெங்களூருவில் இருந்து கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், அழைத்து வரப்பட்டு 12 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு நீதிபதி வீட்டில் அவர் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மீராஜாக்சன் தரப்பில், “பள்ளி நிர்வாகம் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை” என விசாரணையில் மீரா ஜாக்சன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீதும் போக்சோ மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகாருக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உடந்தையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் யார் என்ற விசாரணையை முடுக்கியுள்ளனர் காவல்துறையினர். அதற்காக ‘இறந்து போன மாணவி எப்போது பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தார்; அப்புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன; மாணவியை பெற்றோருடைய அனுமதியில்லாமல் மாணவியை கவுன்சிலிங் அழைத்து சென்றது ஏன்; இறந்த மாணவியும், மிதுன் சக்கரவர்த்தியிடம் பேசிய ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு இரண்டு மாணவிகள் யார் யார் - அவர்கள் புகாரளித்துள்ளனரா, பாதிக்கப்பட்டுள்ளனரா?; மிதுன் சக்கரவர்த்தி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியது ஏன்’ போன்ற கேள்விகள் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடையே தெரிவிக்கும் போது, “இவ்விவகாரத்தில் மிதுன் சக்கரவர்த்தியும், மாணவியின் புகாரின் பேரில் பாலியல் தொந்தரவுக்கு மாணவி ஆளானது தெரிந்தும் காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக மீராஜாக்சினும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்பது தொடர்பாக புலன்விசார்ணை தொடரும்” என்றார். மூன்று கோணத்தில் மாணவியின் வழக்கை பிரித்து இரண்டு பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கு காரணம் யார் என்பதை கண்டறிந்து மூன்றாவது நபரை கைது செய்வார்கள் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட போது எழுதிய கடிதம் என வெளியானக் கடிதம், ‘தன் மகள் தற்போது எழுதியது இல்லை. அது பழைய கடிதம்’ என புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் அக்கடிதத்தில் மூன்று நபர்களின் விபரங்கள் உள்ள நிலையில் அவர்களை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில், முன்னதாக அக்கடிதத்தின் உண்மை தன்மையை அறிய தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், பள்ளி கல்வித்துறை சார்பில் இவ்விவகாரம் குறித்து அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகவே பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, விசாரணை மேற்கொண்டார். அது முடிவுற்ற நிலையில் அதன் அறிக்கையை தயார்செய்யும் பணியில் அவரும் அவர் குழுவும் ஈடுபட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘பள்ளியில் மாணவ மாணவிகள் புகார் அளிப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனவா, இறந்த மாணவியின் புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன’ என்பது குறித்து இடம் பெறும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com