கோவையில் இன்ஸ்டாகிராமில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் புகைப்படம் பதிவிட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகைப்படம் வீடியோ ரீல்ஸ் பதிவிடுவதோ, மோதலை ஏற்படுத்தும் விதமாக பாடல்களுடன் வீடியோ வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் துறை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. முன்னதாக கோவையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கொலை சம்பவங்களை அடுத்து காவல்துறையினர் சமூக வலைதளம் வாயிலாக இந்த மோதல் வெடித்தது என்பதை கண்டறிந்து இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்கள் பதிவிட்டு வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
தமன்னா என்கிற வினோதினி என்கின்ற இளம் பெண்ணும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததை அடுத்து ஆயுத தடை பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழலில் ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தருண் என்கிற இன்ஃபான்ட் ராஜ் rowdybaby007 என்கிற பெயரில் கத்தி, அரிவாள் உள்ளிடவற்றுடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் காவல்துறையினர் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.