கோவையில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்த 3 பேரை கைது செய்த போலீசார், 17.5 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கை மற்றும் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் பகுதியில் உள்ள மலை மற்றும் வனப் பகுதிகளில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் வனத் துறையினருடன் இணைந்து தீவிர கூட்டு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆனைகட்டி பகுதியில் உள்ள துமனூர் கிராமத்தில் வசித்து வரும் ராமன் (62), பெருமாள் (57) மற்றும் ரங்கராஜ் ஆகியோர் அவர்களது வீட்டிற்கு பின்னால் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்கள் வளர்த்து வந்த 17.5 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.