செய்தியாளர்: பிரவீண்
கோவை சரவணம்பட்டி பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி என்பவர் அங்கிருந்து குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி என்பவரை காருடன் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த காரில் 500 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் சேர்ந்து குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பீளமேட்டைச் சேர்ந்த ராம்குமார் என்பவரையும் தனிப்படை போலீசார் பிடித்தனர். இதனையடுத்த சரவணம்பட்டி பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து குட்கா பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யபட்டது. சர்வன் கிரி மற்றும் ராம்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர் குட்கா பொருட்களை அங்கிருந்து கோவை அனுப்புவதில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து முகேஸை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.